புதுடில்லி: டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டின் முன்பு துர்நாற்றம் அடிக்கும் குடிநீரை ஊற்றி கேள்விகள் பல எழுப்பி உள்ளார் ஆம்ஆத்மி எம்பி. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் நிலையில் நீர்நிலைகளின் தரம் நாளுக்குநாள் சீர்கெட்டு வருகிறது. யமுனை நதி ரசாயன கழிவுகள் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
வாகன புகை, வேளாண் கழிவுகளை எரித்தல், ஆலையில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் சட்டவிரோதமாக தீபாவளி பாட்டாசுகள் கொளுத்தி மேலும் மாசு அதிகரித்துள்ளது. இதனால் சமீப நாட்களாக காற்று தரக்குறியீடும் மோசமடைந்துள்ளது.
இது குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டவர்களின் சுகாதார நலனிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியின் துவாரகா பகுதியில் தண்ணீர் குறைந்த தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து துவாரகா பகுதிக்கு சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சுவாதி மாலிவால், அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் உள்ள குழாய் நீரை பாட்டிலில் பிடித்துள்ளார்.
அதனை அப்படியே கொண்டு சென்று , டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டின் வெளியே தரையில் ஊற்றினார். அந்த பாட்டிலில் இருந்த தண்ணீர் அழுக்கடைந்து, கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசியுள்ளது. தான் கொண்டு வந்த இந்த கருப்பு நிற நீரை டெல்லி மக்கள் குடிக்கவா? என ஸ்வாதி மலிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடிநீரின் நிலை மேம்படவில்லை எனில், துர்நாற்றம் வீசும் நீருடன் கூடிய லாரியுடன் வருவேன் என்று அவர் கூறியுள்ளார். முதலமைச்சர் நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார். ஆனால் தினமும் 10 பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி கேலியாக பொழுதுபோக்குவது அவருடைய வேலையா? என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.