தஞ்சாவூர்: பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், அது தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக இருக்கும் என்று மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
அதிமுகவுடன் உறவாடி பலவீனப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நீண்ட கால திட்டமாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலிலதா மறைவுக்கு பின்னர், அதிமுகவை அழித்துவிட்டு, அந்த இடத்துக்கு வர வேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது.
இதனால் அதிமுக எவ்வளவு பெரிய பாதிப்பைச் சந்தித்தது என அதன் தலைவர்களுக்கு தெரியும். இது தெரிந்தும் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், அது அதிமுக தொண்டர்களின் மன நிலைக்கு எதிராக இருக்கும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை கட்சியுடன் பாஜக உறவாடி, பலவீனப்படுத்தி பிளவுப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். பாஜகவை அதிமுக தேடிச் செல்வது அக்கட்சிக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கும் நல்லதல்ல என்பதை அதிமுக தலைமை புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜகவை தவிர அதிகாரத்தில் யாரும் இருக்கக் கூடாது என அக்கட்சியினர் நினைக்கின்றனர். இது குஜராத், உத்தரபிரதேசத்தில் நடைபெறலாம். தமிழகத்தில் இது நடக்காது. தமிழர்கள் தெளிவாக உள்ளனர். பாஜகவின் சூழ்ச்சி ஒரு காலத்திலும் எடுபடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.