தஞ்சாவூர்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை டிடிவி தினகரன், சசிகலா, திவாகரன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனையடுத்து வைத்தியலிங்கம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் வைத்திலிங்கத்தை இன்று அடுத்தடுத்து சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதனைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இந்த சந்திப்பு தொடர்பாகப் பேசுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் திரள வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதற்குத் தடையாக இருப்பவர்கள் வரும் காலத்தில் நிச்சயம் பதில் சொல்வது போன்ற சூழ்நிலை வரும்” எனத் தெரிவித்தார்.
மேலும் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்தார். இந்த கட்சி மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. நல்லாட்சியை 2026ம் ஆண்டு கொடுப்போம். அந்த ஆட்சி மக்களாட்சியாக இருக்கும்.
அதிமுக ஒன்றிணைவது என்பது ஒருவர் முடிவு செய்யும் விசயம் இல்லை. கட்சியின் சட்டதிட்ட விதிப்படி தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அது தான் நடக்கும். அதனை நல்லபடியாகச் செய்வோம்” எனப் பேசினார்.