ஈரோடு: இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வி.சி.சந்திரகுமார் கூறும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தான் இந்த தேர்தல் உடைய கதாநாயகனாக இருக்கப் போகிறது.
அது மட்டுமல்ல இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் யூகங்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையும் தான் இந்த தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது என்றார்.