சென்னை: முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்பு செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் காலூன்றுவதே பாஜகவின் நோக்கம்.
அது ஒருபோதும் நடக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்று அன்வர் ராஜா கூறியது தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது. அன்வர் ராஜா விரைவில் அதிமுகவை விட்டு வெளியேறுவார் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அன்வர் ராஜா இன்று திமுகவில் சேர சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்குச் சென்றார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
எம்ஜிஆர் காலம் முதல் இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.