சென்னை ; எடப்பாடி பழனிசாமி எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதனால் எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “சாமானிய மக்களுக்காக இந்த மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டில் தொடங்கினார் . எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்பு ஜெயலலிதா, தன் அயராத உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அதிமுக-வை உருவாக்கினார். இருபெரும் தலைவர்களின் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார்.
அதிமுக-வை மீட்டெடுத்து, இரட்டை இலையை மீட்டெடுத்து, இன்றைக்கு தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தினரிடம் சிக்காமல் மீட்டெடுக்க எழுச்சி பயணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராக களப்போராளியாக உரிமை போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இதுவரை 150 தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு, 65 லட்சம் மக்களை சந்தித்து சரித்திரம் படைத்த எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்றெரிச்சல் அடைகின்றனர். பொறாமையால் வசைபாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் அதிமுகவில் பிரச்னை, தொண்டர்களிடம் பிரச்னை, நிர்வாகிகளிடம் பிரச்னை, தலைமையில் பிரச்னை என்று வாய்க்கு வந்ததை கூறி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதனால் எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது.
தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ, அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடி பழனிசாமி உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அதிமுகவின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுப் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற புதிய கோஷத்தை எடுத்து வைக்கும் இந்த செல்லாக்காசுகளின் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அதிமுகவில் சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது. ஒவ்வொரு தொண்டரும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்தபோது தாயாக நமக்கு கிடைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்.
சிலர் பதவி சுகம், அதிகாரத்தைப் பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். 2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலர நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்” என்றார்.