தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவித்து தமிழக விவசாயிகளின் கூட்டு இயக்க குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் விவசாய சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுடன் நிலை என்ன என்று கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதில் விவசாயிகள் அனைவரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாக மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிக் கொண்டே இருக்கும் விவசாயிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மின்சார திருத்த அவசர சட்டம் கொண்டு வந்து மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கைப் பாவையாக செயல்படுகிறது. அதேபோல மத்திய அரசு விலையைத் தவிர எந்த மாநில அரசும் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்க கூடாது என்று அவசர சட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து தலைமை செயலாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இது போன்ற மத்திய அரசின் தொடர்ந்த விவசாயிகளுக்கு எதிரான மனநிலையையும், நடவடிக்கைகளையும் கண்டிப்பது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளுக்கு விவசாயிகள் சங்கங்களின் ஆதரவு கிடையாது என்றும் தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன் காக்கும் திமுக கூட்டணிக்கு ஏகமனதாக ஆதரவு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகள் நலன் பற்றி அக்கறை கொள்ளாமல் விரோதப்போக்கையை கடைப்பிடித்து வருகிறது. விவசாயிகளுக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது எனக்கூறி நாடு தழுவிய அளவில் கடும் போராட்டங்கள் வெடித்தன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வேளாண் விளைபொருள் சந்தை குழு அமைப்புகளை அழிக்கும் சட்டங்கள் இவை என்பதால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். நீண்ட போராட்டங்களால் விவசாயிகள் வெகுவாக மன உளைச்சலுக்கு உள்ளாகினர். குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அறிவிக்கவில்லை.
தற்போது மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாம். அதில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகையை தவிர மாநில அரசுகள் ஊக்கத் தொகை அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம். இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு எடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.