சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் பாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்.
குண்டுவெடிப்பு காரணமாக ஒரு வீடு தரைமட்டமானது, எதிர்புறத்தில் 20 வீடுகள் சேதமடைந்தன. மற்றொரு மளிகைக் கடையும் முற்றிலும் சேதமடைந்தது. தீபாவளியையொட்டி பட்டாசு தொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுக்க தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பட்டாசு தொழிலில் ஈடுபடுபவர்கள், உரிமம் இல்லாமல் வெடி தயாரிக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பட்டாசு தயாரிப்பில் அக்கறை மற்றும் பாதுகாப்பு இல்லாததால் ஏற்படும் உயிர் இழப்புகள் தொடரக்கூடாது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும்.