கரூர் : ” சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மொபைல் போன் வாயிலாக வெளியில் இருப்போரிடம் பேசி வருகிறார்,” என, யு டியூபர் சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கரிகாலன் தெரிவித்தார்.
கரூரில் அவர் அளித்த பேட்டி: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், யு டியூபர் சவுக்கு சங்கர் மீது, ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தார் என விக்னேஷ் என்பவரிடம் பொய்யான வாக்குமூலம் பெற்று, வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதற்காக, நான்கு நாள் போலீஸ் காவல் பெற்றுள்ளனர். இதற்காக, சவுக்கு சங்கரை நேற்று முன்தினம் இரவே, சென்னை புழல் சிறையில் இருந்து அழைத்து வந்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். சவுக்கு சங்கருக்கு சிறையில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளும், உணவும் தருவது இல்லை. உரிய பணம் செலுத்தியும், சிறையில் அவருக்கு நாளிதழ்கள் தருவதில்லை.
சென்னை புழல் சிறை மருத்துவமனையை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கெஸ்ட் ஹவுஸ்’ போல் பயன்படுத்தி வருவதாக, சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார். இரவு நேரத்தில், அனைத்து கைதிகளையும் அறையில் அடைத்து விட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, வாக்கிங் செல்ல அனுமதிக்கின்றனர். மேலும், செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வெளியில் இருப்போரிடம் செல்போன் வாயிலாக பேசி வருகிறார் என்றும் சங்கர் கூறினார். இவ்வாறு கரிகாலன் கூறினார்.