சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பி.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன வகைக்கு ஏற்ப கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும். ஏற்கனவே பலமுறை கட்டண உயர்வால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளை மேலும் தாக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு உள்ளது.
எனவே, சுங்க வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், முருகன் கோவில்களில் மாணவர், மாணவிகளுடன் கந்தஷசஷ்டி ஓதுதல், இத்துறையின் கீழ் இயங்கும் கல்லுாரிகளில் சிறப்பு ஆன்மிக பாடப்பிரிவுகள் ஏற்படுத்துதல், துறையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் முருக பக்தி இலக்கியத்தை மையமாக வைத்து போட்டிகள் நடத்துதல் போன்ற முடிவுகள் ஏற்கத்தக்கவை அல்ல.
எந்த மதக் கொள்கையையும் பரப்புவது அரசின் வேலையாக இருக்கக் கூடாது. மத நல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையும் பேணப்பட வேண்டும். கல்வித்துறையில் தமிழகம் மதச்சார்பற்ற மாநிலம்.
இந்நிலையில், தற்போது மாணவர்களை மதரீதியாக பிரிக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் மதச்சார்பின்மை அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது.
இந்து சமய அறநிலையத் துறையை அழிக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.க.வின் நோக்கத்தை முறியடிக்கும் வகையில், அறிவியலுக்கும், மதச்சார்பின்மைக்கும் கேடு விளைவிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவது ஏற்புடையதல்ல.
எனவே, முருகன் மாநாட்டுத் தீர்மானங்களை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.