சென்னை: போலீஸ்காரரையே கொல்லும் அளவுக்கு கஞ்சா வியாபாரிகளுக்கு தைரியம் வந்துள்ளது. திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் முறையாக இருந்தால் மட்டுமே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை முதல்வர் துறைமுருகன் தெரிவித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இது தொடர்பான விவாதத்துக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமிளியில் ஈடுபட்ட போது, குறுக்கிட்ட சபாநாயகர் அவையின் மரபு படி அறிவிப்பு கொடுக்காமல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அமிளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, மக்களின் பிரச்சினைகளை கூறுவது தான் எங்களுடைய கடமை.
ஆனால் இன்று மக்கள் பிரச்சனையை குறித்து பேச எனக்கு அனுமதி தரவில்லை. மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை, அவர்களது குடும்பத்தை பற்றி மட்டுமே திமுக அரசு கவலைப்படுகிறது. உசிலம்பட்டி காவலர் கொலை தொடர்பாக பேச சட்டசபையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் தைரியமாக உள்ளனர்.
போதைப் பொருள்களை கட்டுப்படுத்த திமுக தவறிவிட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சுதந்திரமாக விற்பனை செய்கின்றது. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளது. காவல்துறை காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும். திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இன்றைய தினம் எங்களை திட்டமிட்டு சட்டசபையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார். எவ்வளவு முக்கியமான பிரச்சினையாக இருந்தாலும் துணை முதல்வரின் பதிலுரை தடைப்படக்கூடாது என நினைக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.