சென்னை: குழப்பம், அழுத்தம் இல்லாமல் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
கூட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேசிய டிடிவி தினகரன், “தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பெருமதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களே…” என்று மரியாதையுடன் தொடங்கினார்.
தயக்கம், குழப்பம், அழுத்தம் இல்லாமல் அமமுக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு ஏற்றுள்ளது. “நானும் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவின் தொண்டர்கள். எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லிக்கொள்கிறேன் என்றார். இந்தப் பேச்சு கூட்டத்தில் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. அமமுக – அதிமுக இடையேயான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
கூட்டணியின் வெற்றிக்கு அமமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்ற உறுதி தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. திமுகவுக்கு எதிராக அதிமுக – பாஜக – அமமுக கூட்டணி வலுவடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோரின் இணைந்த பேச்சு தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.