சென்னை: வருகிற 3-ம் தேதி தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், ‘பேராவூரணி பேரூராட்சி மன்றம்’ திமுகவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வருகிறது. பேராவூரணி பேரூராட்சி திமுக செயலாளர் பொறுப்பு, பேரூாட்சி மன்றத் தலைவர் பதவி முதலானவை ஒரு திமுக குடும்பத்தின் வசமாகி, ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்வதில் அரசு விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி மன்றத்தில் திமுகவினரால் நிகழ்த்தப்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்த திமுகவினருக்கு ஆதரவாக இருந்து வரும் திமுக அரசையும், பேரூராட்சி மன்ற நிர்வாகத்தையும் கண்டித்து, அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் வரும் 3ம் தேதி காலை 10 மணியளவில், பேராவூரணி பேரூராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ், எம்.எல்.ஏ., தலைமையிலும்; தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும். குடும்ப ஆட்சி நடத்தும் திமுக அரசையும், ஊழல்கள் மலிந்துள்ள பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.