ஈரோடு: பணப்பட்டுவாடா செய்யும் கட்சியை தோற்கடித்து ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நேற்று காளைமாடு சிலை அருகே நடந்த பிரசார கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-
தமிழகத்தில் தனித்து நின்று துணிச்சலாக போட்டியிடும் ஒரே இயக்கம் நாம் தமிழர் கட்சி. தர்மம் வெல்லும் என்பது உண்மையானால் ஒரு நாள் வெற்றி பெறுவோம். தமிழ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், அவர் சட்டப் பேரவையில் உங்கள் குரலாக இருப்பார். இதுவரை யாரை, யாரை நம்பி வந்தீர்கள்? இம்முறை நாம் தமிழர்களை நம்பி வாக்களியுங்கள். இந்த வெற்றியின் மூலம் நீங்கள் உருவாக்கும் வரலாறு எதிர்காலத்தில் பேசப்படும்.
பணப்பட்டுவாடா செய்யும் கட்சியை தோற்கடித்து ஜனநாயகத்தை மலரச் செய்ய இந்த இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். பணத்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்குங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல மாற்றத்திற்கும் மாற்று அரசியலுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். சீமான் மீது வழக்குப் பதிவு: ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் காளைமாடு சிலை, மரப்பாலம், கச்சேரி வீதி ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
காளைமேட்டு சிலை பகுதியில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, உரிய அனுமதியின்றி, கட்சி கொடி, பேனர்கள், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி நாம் தமிழர் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 37 பேர் மீது பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் மரப்பாலம் பகுதியில் உரிய அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சீமான் உள்பட 8 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் கச்சேரி தெருவில் முறையான அனுமதி பெறாமல் தெருமுனை கூட்டத்தில் பிரச்சாரம் செய்ததாக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சீமான் உள்பட 6 பேர் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.