சேலம் : சேலம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் திட்டமிட்டபடி பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ளதுஎன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அரசுக்கு நிச்சயம் ஒரு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்பதை மனதில் வைத்து, மனுக்களை கவனமாக கையாண்டு அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் நற்பெயரை பெற்றுத் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் திட்டமிட்டபடி பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ளது. 45 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதேபோல கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிக மனுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை கவனமாக பரிசீலித்து அவற்றிற்கும் விரைவாக தீர்வு காண வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கின்றேன்.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் வாரத்திற்கு ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட முகாம்களை நடத்தி மக்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். கலைஞர் விளையாட்டு உபகரணங்களை அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு உபகரணங்கள் கேட்பவர்களுக்கு வழங்கி அந்த பதிவேடுகளை பராமரித்து அந்த செயலியையும் சரியாகப் பயன்படுத்துமாறு நீங்கள் எல்லோரும் வலியுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான பூமாலை வணிக வளாகம் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆட்சித் தலைவர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நம்முடைய அரசு விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், காலை உணவுத் திட்டம் என பல முத்திரை திட்டங்களை தீட்டி மக்களிடம் ஒரு நற்பெயரை பெற்றுள்ளது.
அதேபோல குடிநீர், சாலை பராமரிப்பு, மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை குறித்து மக்களுடைய கோரிக்கைகளை தாமதமின்றி தரமாக நிறைவேற்றி தருவது நாம் அனைவருடைய கடமை. இதை மனதில் வைத்து நீங்கள் எல்லோரும் செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
தீட்டும் திட்டங்களை கொண்டு சென்று சேர்ப்பவர்கள் வந்திருக்கக்கூடிய அரசு அலுவலர்களாகிய நீங்கள் தான். அரசுக்கும் மக்களுக்குமான ஒரு பாலமாக இருந்து, நம்முடைய திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்வதை உங்களை எல்லாம் மீண்டும் கேட்டுக் கொண்டு, முதல்-அமைச்சருக்கு நற்பெயரை பெற்றுத் தருகின்ற பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.