புதுடில்லி: “திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியை எளிமையாக பெற்று தரும் கூட்டணியே எங்கள் கூட்டணி என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வையும், பியூஷ் கோயலையும் சந்தித்தோம். இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம்.
பீகாரில் எவ்வாறு தேர்தல் வெற்றி பெற்றார்களோ, அவ்வாறு தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்டு அனைத்து தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி முறையாக வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு வழங்கி இருக்கிறது.
நிதிய ஆளுமை சரியாக செய்யாமல் உள்ளது திமுக. பீகார் போல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிப்போம். சசிகலாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வருவதற்கான எந்த ஒரு முயற்சியும் இல்லை. அவ்வாறு எந்த ஒரு திட்டமும் இல்லை. பஞ்சபாண்டவர் அணி போல் நாங்கள் செயல்படுகிறோம். திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அதற்கான மாற்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
மத்திய நிதியை எளிமையாக பெற்று தரும் கூட்டணியே எங்கள் கூட்டணி. திமுக சரியாக நிதி நிர்வாகம் செய்யாமல் மத்திய அரசு நிதியை வெவ்வேறு விஷயங்களுக்கு செலவு செய்வதால் தான் நிதி பிரச்சனை. விஜய் உடனான கூட்டணி குறித்த தகவல்களுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மறுத்துவிட்டனர் அதுதான் இறுதி.
கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையாது என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யாகிவிடும். மூன்று நாட்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.