விருதுநகர்: ஆணவத்துடன் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விருதுநகர் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
ஏழை எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. அதனை இந்த மேடையில் மணிக்கணக்கில் என்னால் சொல்ல முடியும். தமிழர்களின் வீர விளையாட்டான அரங்கம் அமைத்தது பயனற்ற திட்டமா? மதுரையில் மாணவ-மாணவிகள் கல்வியாளர்கள் பயன்படுத்தும் வகையில் கலைஞர் நூலகம் அமைத்தது பயனற்ற திட்டமா? கிண்டியில் சிறப்பு மருத்துவமனை அமைத்து பயனற்ற திட்டமா?
தமிழகம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது பயனற்ற திட்டமா? இதில் எதை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இப்படி வாய்துடுக்காகவும் ஆணவத்துடன் பேசி பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். நான் உறுதியாக சொல்கிறேன். உங்கள் ஆணவத்திற்காக தான் இனிமேல் தமிழக மக்கள் உங்களை தோற்கடித்து கொண்டே இருப்பார்கள்.
தமிழக மக்கள் மனதில் கலைஞர் தவிர்க்க முடியாதவர். அவரது புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் வீசுகிறது. அந்த வௌிச்சம் எடப்பாடியின் கண்களை கூச செய்கிறது. எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக உங்களின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் ஒரு சேவகனாக எனது பணிகள் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.