சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்.
700 படுக்கைகள் கொண்டு சிகிச்சை அதிநவீன மையமாக மாற்றுவதற்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு செய்யப்படும்.
பரவிவரும் கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும். இதற்கு ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது.
தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதேபோல் அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் உருவாக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்குத் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு. விண்வெளித் தொழில்நுட்ப நிதி – ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் கட்டப்படும்.
ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படும்.
250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படும். ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படும். ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 உருவாக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு என்றும் பட்ஜெட்டிடில் அறிவித்துள்ளார்.