தஞ்சாவூர்: எதிர்க்கட்சிகள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், திமுகவையும் பிரிக்கும் எண்ணம் நடக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: திருமாவளவனுக்கு எதிராகவும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் விமர்சனம் செய்தால், விடுதலைச் சிறுத்தைகள் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவர் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், எப்படி, யாருக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது நமக்கு தெரியும். நம்மை ஆத்திரமூட்ட வருபவர்களுக்காக, நாம் ஏன் எதிர்வினையாற்ற வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள்தான் உள்ளன. திமுகவுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் இடையேயான உறவை விரும்பாதவர்கள் திட்டமிட்டு அவதூறு பரப்புவர். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களை நமது கருத்துக்களைப் பரப்பும் தளமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் தவிர, அதிலும் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருமாவளவனை சீண்டினால்தான் பிரச்னை வரும் என கணக்கு போட்டு செய்கின்றனர். யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. எவரும் எதையும் பேசி, விமர்சித்துவிட்டு போகட்டும். நம்மை இழிவுபடுத்துவதாக நினைத்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவர். அதை நாம் பொருட்படுத்தவோ, கண்டுகொள்ளவோ கூடாது.
நாம் பேசும் அரசியலும், திமுக பேசும் அரசியலும் ஒன்றுதான். எதிர்க்கட்சிகள் எவ்வளவு பேசினாலும், சூழ்ச்சி செய்தாலும் எங்களைப் பிரிக்கும் எண்ணம் நடக்காது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வருகிற தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ச. முரசொலி, சட்டபேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.