துபாய்: ஈரான் விடுத்த எச்சரிக்கை… ”ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக செயல்படுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்,” என, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு அந்நாட்டின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேல் மோதல் நடக்கிறது. லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் ராணுவ துருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.
அமெரிக்க ராணுவ செய்தி செயலர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், ”அரபிக் கடலில் யு.எஸ்.எஸ்., ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட உள்ளது. ஈரான் மற்றும் அதன் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதலை தடுக்க, போர் விமானங்கள், டேங்கர்கள், பி – 52 நீண்டதுார குண்டுவீச்சு விமானங்கள் உள்ளிட்டவையும் அரபிக்கடல் பகுதிக்கு வரவுள்ளன,” என்றார்.
இந்நிலையில், ஈரான் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று கூறுகையில், ”இஸ்ரேலாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக செயல்படுவோர், அதற்கான விளைவுகளை நிச்சயம் சந்திப்பர். இது உறுதி,” என்றார்.