பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்-தர்மபுரி பிரதான சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:தி.மு.க. ஆட்சிக்கு வந்து 53 மாதம் ஆகிவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? சிந்தியுங்கள். அ.தி.மு.க. அரசு இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்கள் படிக்க பொறியியல் கல்லூரி கொண்டுவந்தோம். எல்லோரும் இன்ஜினியராகும் வாய்ப்பு உருவாக்கினோம். பட்டப்படிப்புக்கு கலை அறிவியல் கல்லூரி கொண்டு வந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அதிகமாக பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம். கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அம்மாவிடம் எடுத்துச்சொல்லி 68 கலை அறிவியல் கல்லூரியை 10 ஆண்டுகளில் கொண்டுவந்தோம்.
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். மருத்துவக் கல்லூரி இடங்களை 3,445-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு உருவாக்கினோம். மாநிலம் மேன்மையடைய கல்வி சிறக்க வேண்டும் என கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். ஒரு அரசு எப்படி செயல்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம்.தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தாரா? மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறார்.
நாங்கள் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, அம்மா இருக்கும்போது 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசின் நிதியில் உருவாக்கினார். அப்படியான தில்லு திராணி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கி வருகின்றன.
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.ஸ்டாலினும்தான் முதலீடு ஈர்க்கிறேன் என்று வெளிநாடு போனார். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பத்தரை லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்கள்.
77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார். அப்படி என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே? எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகும் இப்போதும் அதையே செய்கிறார். ஜெர்மனிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்போகவில்லை, முதலீடு செய்யப் போனதுதான் உண்மை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார். வெள்ளை அறிக்கை விடவேண்டும் என்று கேட்டேன். வெள்ளை பேப்பரை எடுத்து தொழிற்துறை மந்திரி காட்டுகிறார். ஸ்டாலின் அவர்களே… தொழில்துறை மந்திரியும் சரி, நீங்களும் சரி சட்டமன்றத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் வாங்கப் போறீங்க. எப்படி வெள்ளை பேப்பரை காட்டுறீங்களோ அதேமாதிரி மக்கள் வெள்ளை பேப்பரில் பூஜ்ஜியம் போட்டுக் கொடுப்பார்கள்
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேட்டால், மக்களுக்காக அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. ஆனால் கிண்டலும், கேலியும் செய்து மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இளைஞர்களை ஏமாற்றும் விதமாக வெறும் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறீர்கள்.
மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது, ஒரு நபர் கமிஷன் போட்டிருப்பதால் ஆழமாகப் போகாமல் மேலோட்டமாகப் பேசுறேன். துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார்.
உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. ஒரு பொதுக்கூட்டம் என்றால் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.