புதுடில்லி: இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஏராளமான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது, மிகமுக்கிய விவகாரங்களில் கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “சிங்கப்பூரில் தரையிறங்கினேன். இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஏராளமான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்.”
“இந்தியாவின் சீர்திருத்தங்கள் மற்றும் யுவ சக்தி திறமை நம் நாட்டை சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுகிறது. இதுதவிர நெருங்கிய கலாச்சார உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்,” என பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வளம்சாவளியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும், அவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டோல் இசைகருவியை இசைத்து மகிழ்ந்தார்.