சென்னை: தமிழக அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம், சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ. 1,00,000 பரிசு வழங்கும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காக, எழுத்தாளர்கள் தங்களின் சிறந்த இலக்கியப் படைப்புகளை சமர்ப்பிக்கலாம்.
ஆண்டுதோறும் 11 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்படும். இதில், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 9 எழுத்தாளர்களும், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரச்னைகள் குறித்து எழுதும் ஒருவரும், மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத ஒருவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப நிபந்தனைகள்:
- எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.
- கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் நாவல் போன்ற வகைகளில் படைப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். படைப்பு தமிழில் இருக்க வேண்டும்.
- எம்.ஃபில், பிஎச்டி போன்ற படிப்புகளுக்குத் தயாரிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் போன்று சிறப்பாக இருக்க வேண்டும்.
- படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
- ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்ட படைப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டாம்.
- ஒருமுறை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
- படைப்புகளைத் தேர்வு செய்வது தொடர்பாக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2024
விண்ணப்பிக்குமிடம்: தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் படைப்புகளை இரண்டு பிரதிகளாக டிஜிட்டல் முறையில் மற்றும் அதற்கான படிவத்தில், மொபைல் எண்ணை தவறாமல், இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆதி திராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த புதிய அறிவிப்பு, தமிழ்நாட்டின் எழுத்து உலகிற்கு ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்பாக கருதப்படுகிறது.