சென்னை: ராணிப்பேட்டையில் ஃபெல் ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சேட்டு மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றப் பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தக் கோரி நீதிமன்றங்களில் 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக ரூ.521 கோடியே 83 லட்சம் வழங்க வேண்டும். இதேபோல் தமிழக வருவாய்த் துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில் அதில் ரூ. 806 கோடியே 22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்த 1,303 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இத்தொகையை விரைந்து வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, நிலுவையில் உள்ள இழப்பீடு வழங்க அதிகாரிகள் கூட்டத்தை அரசு கூட்டி உள்ளதாகவும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.