சென்னை: சென்னை தரமணியில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) சென்னை வளாகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) சார்பாக “தென்னிந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி கூறியதாவது: ஆட்டோமொபைல் பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை மற்றும் அதன் துணைப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 40% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் 31,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

தமிழ்நாட்டில் 17 பெரிய ஆறுகள் உள்ளன. அவற்றில், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் பாலாறு ஆகியவை நமது விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்தின் உயிர்நாடி. தமிழ்நாடு 1076 கி.மீ கடற்கரையைக் கொண்டுள்ளது. இது ஏராளமான கழிமுகங்கள் மற்றும் பவளப்பாறைகளின் தாயகமாகும். இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமான மன்னார் வளைகுடாவும் இங்கு அமைந்துள்ளது. கடல் பசு போன்ற அழிந்து வரும் உயிரினங்கள் உட்பட 4,000-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ராம்சர் ஈரநிலங்களும் (20 தளங்கள்) தமிழ்நாட்டில் உள்ளன. காலநிலை மாற்றம் அவற்றின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய சவாலாகும். இருப்பினும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்க, தமிழக அரசு ‘மறுசுழற்சி செய்யக்கூடிய கடற்கரை’ திட்டத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கான மக்கள் இயக்கமாக மாற்றுகிறது. பசுமை தமிழ்நாடு இயக்கம், ஈரநில இயக்கம் மற்றும் கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தை செயல்படுத்த ‘தமிழ்நாடு பசுமை காலநிலை அறக்கட்டளை’யையும் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர் இயக்குநர் எஸ். வெங்கட மோகன், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் (SERC) இயக்குநர் என். ஆனந்தவல்லி, முன்னாள் சிஎஸ்ஆர் இயக்குநர் சுகுமார் திவோட்டா, கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எஸ். கலா, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர் என். ரமேஷ், எல்&டி துணைத் தலைவர் கே. ராஜீவன் உள்ளிட்டோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.