சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் முதல் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 26-ம் தேதி கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.