சென்னை: மயோனைஸீ தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சை முட்டைகள் உணவு நச்சுத்தன்மையால் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், சால்மோனெல்லா பாக்டீரியாவால் இந்த உணவு விஷமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற தயாரிப்பு மற்றும் முறையற்ற சேமிப்பு காரணமாக மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவு 30 (2) (ஏ)ன் கீழ் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைசேவுக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மயோனைஸ் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஓராண்டு காலத்திற்கு இந்தத் தடை அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.