சென்னை: சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் புறநகர் மின்சார ரயில் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. புறநகர் மின்சார ரயில் சேவை என்பது சென்னை நகரின் தவிர்க்க முடியாத பொதுப் போக்குவரமாகும். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயணிப்பதால், ஏசி வசதியுடன் கூடிய ரயில்கள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில்களை இயக்க 2019ல் ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கோரியது. இதையடுத்து 12 பெட்டிகள் கொண்ட 2 ஏசி மின்சார ரயில்களை தயாரிக்க சென்னை ஐசிஐஎஃப் நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியது. கடந்த மாதம் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 20-ம் தேதி முதல் ஏசி மின்சார ரயில் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் புறநகர் ஏசி மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.