மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்கனவே 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்கள் வரும் 30-ம் தேதி முதல் 12 ஆக அதிகரிக்கப்படும். அதேபோல் திருச்சிக்கு வரும் 22-ம் தேதி முதல் விமான சேவையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பயணிகள் விமானம் மூலம் சென்று வருகின்றனர். அந்த பகுதிகளில் போதிய வசதிகள் இல்லாததால், அங்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் வார இறுதி நாட்களில் விமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக கட்டணம் செலுத்தி பல மணி நேரம் பயணம் செய்வதற்கு பதிலாக விமானத்தில் பயணம் செய்யலாம் என பல பயணிகள் கருதுகின்றனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஏற்கனவே தினமும் 8 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பண்டிகை நாட்களில் இந்த விமானங்களில் டிக்கெட் கிடைக்காது. இதையடுத்து, கடந்த 30-ம் தேதி முதல் சென்னை-தூத்துக்குடி இடையேயான விமானங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சென்னை-தூத்துக்குடி இடையே தினமும் 12 விமானங்கள் இயக்கப்படும்.
இதில் சென்னை-தூத்துக்குடி இடையே 6 விமானங்களும், தூத்துக்குடி-சென்னை இடையே 6 விமானங்களும் இயக்கப்படும். அதேபோல், சென்னை – திருச்சி இடையே பறக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது சென்னை – திருச்சி இடையே தினமும் 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை – திருச்சி இடையே வரும் 22-ம் தேதி விமானங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் அன்று முதல் சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு திருச்சிக்கு விமானம் புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு தரையிறங்குகிறது. அங்கிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை வந்தடையும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி, திருச்சிக்கு விமான சேவை அதிகரித்துள்ளதால் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.