சென்னை: இதுகுறித்து, சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:- தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் வேளாண் விரிவாக்க முறைகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, ‘விஸ்டார்’ என்ற புதிய திட்டத்தை முன்னோடியாக செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ் பணியாற்ற உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சமீபத்தில் டெல்லியில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சாமுவேல் பிரவீன் குமார் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்அப்களுக்கான ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஏ.தில்லைராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர். டில்லிராஜன் பேசுகையில், “இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு விவசாயம். அந்த வகையில், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருவதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விவசாயம் தொடர்பான தகவல்கள் எளிதாகவும், விரைவாகவும் விவசாயிகளை சென்றடையும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய சேவைகளை விவசாய சந்தைக்கு கொண்டு வரும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பல்வேறு வழிகளில் பயனளிக்கும்.
விவசாயத் துறையில் அதிக அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகும். தகவல் தொழில்நுட்ப வசதிகள் விவசாயிகளை எளிதில் சென்றடையும். விவசாயிகள் மற்றும் தொடர்புடைய துறைகளில் உள்ளவர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திறன்கள் மற்றும் பலன்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.