தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்ற ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த எல்.பாலாஜி சரவணன், கோவை சிவில் சப்ளை குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட 33வது காவல் கண்காணிப்பாளராக ஆல்பர்ட் ஜான் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பாலாஜி சரவணன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், நிருபர்களிடம் கூறியதாவது:மக்கள் உயிர், உடைமைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம்.அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.கொலை, விபத்து என, உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் உயிரைப் பாதுகாப்பதே எங்களின் முக்கிய பணி. ஏற்கனவே ‘மாற்றம் தேடுதல்’ என்ற சமூக நல்லிணக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமான சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், தேவைப்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற தடுப்புச் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதுள்ள எஸ்பி பெரும் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த நடவடிக்கைகள் தொடரும். சாதி, மத மோதல்களை தடுக்கவும், சமூக ஒற்றுமையை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடலோர மாவட்டம் என்பதாலும், சர்வதேச கடல் எல்லையின் ஒரு பகுதி என்பதாலும் கடலோர காவல்படையினருடன் இணைந்து கடத்தலை தடுக்க கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் கண்காணிக்கப்படும்.
குற்றங்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகள் மீது, அவர்களின் சொத்துகளை முடக்குவது உட்பட, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகர போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. அதன் பிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மேலும், புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் POCSO சட்ட விசாரணை குறித்து போலீசார் நன்கு அறிந்திருக்க வேண்டும். நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.