சென்னை: கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு நிகழ்த்திய விவகாரம் சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பள்ளிகளின் முதல்வர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனுடன் பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் விசாரணை நடத்தி வந்தது. அதன்படி, அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்களிடம் நிகழ்ச்சி குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மகா விஷ்ணுவை பரிந்துரை செய்தவர் யார், முன் அனுமதி பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் விசாரணைக்குழு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த பணிகள் நேற்று நிறைவடைந்தது.
இந்த அறிக்கை இன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதில் உள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.