சென்னை: “வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டனத்துக்குரியது. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி கைது செய்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 37 மீனவர்கள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.
அது தவிர 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்களை கைது செய்து, மீனவர்களை தாக்கி, மீனவர்களின் உடமைகளை சூறையாடி, படகுகளை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறது இலங்கை அரசு.
இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இலங்கை அரசின் ஆணவமும் அத்துமீறலும் இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இதைத் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
இலங்கையில் தேர்தல் முடிந்து புதிய அதிபர் பதவியேற்க உள்ள நிலையில், மீனவர்களை கைது செய்வதையும் தாக்குவதையும் கைவிடுமாறு இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுவை மத்திய அரசு அமைத்து, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,” என்றார்.