தேனி: தேனி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பார்வையிட்டார்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சியில் பெய்த கனமழை காரணமாகவும், முல்லை ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிக தண்ணீர் காரணமாகவும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
கம்பம் பகுதியில் நெல் வயல்களில் மழைநீர் புகுந்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்கு வாங்கி வைத்திருந்த ஆடுகள், பண்ணையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
திராட்சை செடிகளும் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதால் வாழை பயிரிட்டிருந்த வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. நேற்று மழை சற்று குறைந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 11வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் தடை நீடிக்கிறது. இதேபோல் மேகமலை மற்றும் சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் விடுமுறை நாளில் குடும்பத்தினருடன் ஏராளமானோர் வைகை அணைக்கு குவிந்தனர். அங்கு 7 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் அதனை கண்டு ரசித்தனர்.
மழை வெள்ளத்தால் பயிர்கள், ஆடு, கோழிகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ள நிலையில் இதுகுறித்து பார்வையிட்டு கணக்கீடு செய்யும் பணியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புகளால் சேதமடைந்த மக்கள் மாற்று இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உப்புக்கோட்டை பகுதியில் பட்டாளத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டுள்ளார். அங்குள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கியிருந்தவர்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அவருடன் முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத் உள்பட கட்சி நிர்வாகிகள் சென்றனர்.