பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் இன்று 4வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை, வட்டக்கானல், வெள்ளகேவி, பாம்பர்புரம் போன்ற அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் கடந்த 12ம் தேதி வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக இன்றும் தொடரும் என வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், அருவியில் வெள்ளம் சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.