சென்னை: கோடைவெயிலில் இருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைக்க கம்பங்கூழை அருந்தலாம். கம்பங்கூழ் என்பது நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகவே உள்ளது.
கம்பு, கேப்பை உள்ளிட்ட தானிய வகைகளை நமது முன்னோர்கள் பாரம்பரியமாக கூழ் கஞ்சி போல செய்து தங்களின் பிரதான உணவாகவே சாப்பிட்டு வந்தனர்.
20 வருடங்களுக்கு முன்பு தினசரி தமிழகத்தில் உள்ள அனைவரது வீட்டிலும் இந்த கம்பங்கூழை சாதாரணமாக தயாரித்து சாப்பிட்டு வந்தனர். இன்னும் அம்மன் கோவில் திருவிழாக்களில் திருவிழா நிறைவு பெறும் நாளிலும், ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் கம்பங்கூழ், கேப்பைகூழை அம்மனுக்கு பிரசாதமாக படைத்து ஊர் மக்களுக்கு அதனை பருகி வருகின்றனர்.
இந்த கம்பங்கூழில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றது. சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டது. இந்த கோடை காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது வழக்கம்.
மிக முக்கியமாக உடல் சூட்டின் காரணமாக இளம் வயது வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான பாரம்பரியமான அற்புத பானம் தான் இந்த கம்பங்கூழ். இது எங்கு கிடைத்தாலும் நாம் தாராளமாக வாங்கி சாப்பிடலாம். அந்த அளவிற்கு ஆரோக்கியமானது இது.
உடல் சூட்டை தணிப்பதாக நினைத்து சாலையோரங்களில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, அதே சாலையோரங்களில் விற்கப்படும் பாரம்பரிய உணவான கம்பங்கூழ் வாங்கி சாப்பிட்டால் நமது உடல் சூடு முழுவதுமாக குறையும்.
பாரம்பரிய தானிய வகைகளில் ஒன்றான கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி உடல் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். கம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவைகள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ, பி மற்றும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கனிம சக்திகள் பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை கம்பில் நிறைந்துள்ளது.
தினமும் காலை மோர் கலந்த குளிர்ச்சியான கம்பங்கூழ் குடிக்கும்போது உடல் சூடு குறைந்து நாள் முழுவதும் பசி உணர்வு இல்லாமல் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். கம்பங்கூழ் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்கும்.