சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் போது, ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் இயக்க நடைமுறைகள் கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தலைமை அலுவலகம் மூலம் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், சில நேரங்களில் இவை பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் வந்துள்ளதாகவும், புதிய உத்தரவுகள் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.

பேருந்துகள் நிறுத்தத்தில் சரியாக நிறுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக ஏற உதவ வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளி பயணியைக் கூட கவனித்து ஏற்ற வேண்டும். ஓட்டுநர்கள், நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தத்திலேயே பேருந்தை நிறுத்த வேண்டும்; தவறான இடங்களில் நிறுத்தக்கூடாது. நடத்துநர்கள் இடமில்லை என்ற காரணம் கூறி மாற்றுத்திறனாளிகளை இறக்கிவிடக் கூடாது. அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகள் குறித்து அறிவித்து அமரச் செய்ய வேண்டும். பயணச்சீட்டுகளை நேரத்திற்கேற்ப வழங்கி, இறங்கும் இடத்தில் மனிதாபிமானம் கொண்ட முறையில் உதவ வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்குரிய இருக்கையில் பிற பயணிகள் அமர்ந்திருந்தால், அத்தகைய பயணிகளை மாற்றி அமர வைத்து, உரிய இடத்தை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும். பேசும் விதத்தில் மரியாதையை கடைபிடித்து, கோபமாகவோ, இழிவாகவோ நடக்கக்கூடாது. அவர்களிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும். ஏறும் போதும், இறங்கும் போதும் பாதுகாப்புடன் ஒத்துழைக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு 40% திறனிழப்பு மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள், ஒருவரை உடன் கொண்டு நகர்ப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம். இவர்களுக்கு நடத்துநர் உரிய கட்டணமில்லா சீட்டினை வழங்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் புறநகர் பேருந்துகளில் 75% சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய முடியும். இயற்கை சீற்றம் மற்றும் இரவு நேரங்களில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோரிக்கையின் அடிப்படையில் வேண்டிய இடங்களில் பேருந்து நிறுத்தம் வழங்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் மாதாந்திர பயிற்சிகளில் ஓட்டுநர், நடத்துநர்களுடன் மாற்றுத்திறனாளிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களது தேவைகள் நேரடியாக தெரிவிக்கப்படும் வகையில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு பேருந்து ஊழியரும், இத்தகைய பயணிகளைப் பரிசீலனையுடன் நடத்திட வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.
அனைத்து போக்குவரத்துக் கழகங்களும், இந்த நடைமுறைகள் நடைமுறையில் உள்ளதா என கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலாண் இயக்குநர்களும் தங்களது கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தெளிவாக இந்த தகவல்களை அறிவுறுத்தி செயல்படுத்த வேண்டும்.
இந்நடவடிக்கைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான பயண அனுபவத்தை பாதுகாப்பானதாகவும், மரியாதைக்குரியதாகவும் மாற்றும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.