சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்ட அறிக்கை:- காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை சுட்டுக் கைது செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் மீனவர்கள் ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள ஐஸ் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இல்லாமல் வீட்டிலேயே தவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி அளவிற்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காரைக்கால் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கைக்கு மத்திய பாஜக அரசு செவிசாய்க்கவில்லை.
மத்திய பாஜக அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. இலங்கை அரசின் துப்பாக்கிச் சூடு, படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதோடு, இலங்கை அரசின் கொடுமைகளில் இருந்து மீனவ மக்களைக் காக்க இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.