சென்னை: சென்னை மாநகராட்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- புயல் முன்னெச்சரிக்கை பணியில் 22 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 120 சமையலறைகளும் போதுமான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளுடன் தயாராக உள்ளன. மாநகராட்சியின் 36 படகுகள் உள்பட 103 படகுகள் தேவையான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 100 குதிரைத்திறன் கொண்ட 134 ராட்சத மோட்டார்கள் உட்பட 1686 மோட்டார்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
466 டிராக்டர்களுக்கு பொருத்தப்பட்ட மோட்டார்களும் தயாராக உள்ளன. 262 மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் 9 ஹைட்ராலிக் மரம் சீரமைப்பு இயந்திரங்களும் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 835 பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் அனைத்தும் இன்று மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மழைநீர் தேங்கியுள்ளதால் பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களை இன்று பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். வானிலையை கருத்தில் கொண்டு வாகன நிறுத்துமிடங்களை வரும் நாட்களில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.’ வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.