சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த 8-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதை மத்திய வெளியுறவு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
கைது செய்யப்பட்ட 10 மீனவர்களில் 6 மீனவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் (5 பேர் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்). மீனவர்கள் பெரும்பாலும் மீன்பிடித்தலையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் இந்த மீனவர்களை தடுத்து வைத்திருப்பதால் மீனவர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, இலங்கையில் 102 மீனவர்களும் 210 மீன்பிடி படகுகளும் உள்ளன. எனவே, இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகுகளையும் விரைவில், பொருத்தமான தூதரக வழிகள் மூலம் விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.