சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சென்னையில் மண்டலம் ஒன்று முதல் மண்டலம் 15 வரை 871 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பூங்காக்களின் பராமரிப்பு பணிகளையும் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டால், பணிகள் தாமதமடைய வாய்ப்புள்ளது. எனவே, தற்போது 89 பூங்காக்கள் தத்தெடுக்கப்பட்டு, 168 பூங்காக்கள் மாநகராட்சி பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 595 பூங்காக்களுக்கு ஆண்டு பராமரிப்பு பணிக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 15 மண்டலங்களில் 595 பூங்காக்களை பராமரிக்க தொகுப்பு ஒப்பந்தம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், செனாய் நகர், பீட்டர்ஸ் ரோடு, நொளம்பூர், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்குத் தெரு, 197-வது வார்டு இஸ்கான் கோவில் அருகே உயிர் இயற்கை எரிவாயு உற்பத்தி கூடம் அருகே ஒருங்கிணைந்த கோசாலைகள் அமைக்கப்பட உள்ளன.
செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பி.டி.தியாகராய அரங்கம் போதிய வருவாய் இல்லாததால் மீண்டும் வாடகை நிர்ணயம் செய்து தனியாருக்கு ஐந்தாண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.