தஞ்சாவூா்: கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தேடப்பட்டு வந்த டிரைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜரகாததால் அவரை கோர்ட் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, அடுத்தமாதம் 5-ந்தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 52). டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தஞ்சை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.
மேலும் செந்தில் தொடர்ந்து போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் செந்திலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது.
இதனால் செந்திலை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, அடுத்த மாதம் (மே) 5-ந்தேதிக்குள் செந்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருவையாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.