சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 4-ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களுடன் வாகனத்தில் சென்றனர்.
ஆனால், வாகனம் நிறுத்தப்பட்டதால், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அணை பராமரிப்பு பணிக்கு கேரள அரசு தடை விதித்ததால், அங்குள்ள 5 மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக கேரளா செல்கிறார். இதே நிகழ்ச்சியில் கேரள முதல்வரும் பங்கேற்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் தொடங்குவதற்கான சூழலை முதல்வரிடம் பேசி உருவாக்க வேண்டும்,” என்றார்.