தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சிs) செயல்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், பெற்றோர், தலைமையாசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் இருப்பர். இந்த குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் அமைக்கப்படும்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து எஸ்எம்சி கூட்டங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, எஸ்எம்சி கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை மற்றும் லெட்டர் பேடுகளை பள்ளி அளவில் தயாரித்து வழங்க வேண்டும். இதற்கான மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.