தஞ்சாவூர்: சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்படைப்பு கோரி அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுகாதார ஆய்வாளர் நிலை 1, 2 பணியிடங்களுக்கான கூடுதல் ஒப்பளிப்பு கோரி அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துருவுக்கான ஒப்புதல் வழங்க வேண்டும். அரசாணை 337 மற்றும் 338 ஐ திரும்பத் பெற வேண்டும். ஒப்பளிக்கப்பட்டுள்ள 88 நல கல்வியாளர் பணியிடங்களையும் உடன் நிரப்ப வேண்டும். தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் பதவி உயர்வை வழங்க வேண்டும்.
நேரடி பணி நியமன நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட்டு இளநிலை பூச்சியியலாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்ப வேண்டும். புள்ளியியல் உதவியாளர் மற்றும் இளநிலை நீர் பகுப்பாய்வாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வில் தகுதியுள்ள சுகாதார ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பணியமைப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தணிக்கையாளர் செல்வம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சுகாதார செவிலியர் சங்க மாவட்ட செயலாளர் சீதாலட்சுமி, அரசு மருந்தாளுநர்கள் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஹரிஹரன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமாரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.