சென்னை: அரசு மருத்துவர்களை தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களை இழிவாகப் பேசிய சுகாதாரத் துறை உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு தலைமை மருத்துவமனைகள் வரை உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறையை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறை, தன்னலமின்றி பணிபுரியும் மருத்துவர்களை இழிவாக நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வடகிழக்கு பருவமழையில் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படுவதால், 5,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பவும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உருவாக்கவும் வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
எனவே, முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அரசு டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.