உதகை: நீலகிரி மாவட்டத்திற்கு வர வேண்டிய இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் நீட்டித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 1) கூறியதாவது:-
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீலகிரிக்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகள் மே 7-ம் தேதி முதல் நீலகிரிக்குள் இ-பாஸ் பயன்படுத்தி நுழைய உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (செப்டம்பர் 30) வரை இ-பாஸ் முறை அமலில் இருந்தது. இந்த வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய www.epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் இ-பாஸ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 இருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. இ-பாஸ் சரிபார்ப்புக்கு, மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி, சரிபார்த்த பின் நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய வேண்டும்.
இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.