சென்னை: வரதட்சணை வேட்டையால் உயிரிழந்த ரிதன்யா வழக்கில் முக்கியமான மின்னணு ஆதாரம் இருப்பதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் கூறியுள்ளார். தற்கொலை முடிவை எடுக்கும் சில நிமிடங்களுக்கு முன் ரிதன்யா தனது தொலைபேசியில் மனதின் வலியை பதிவு செய்துள்ளார். இதில், தனக்கு மெண்டல் மற்றும் உடல் ரீதியான டார்ச்சர் யார் கொடுத்தார்கள் என்பதை அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இது தவிர வேறு எதையும் அவர் குறிப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆடியோ பதிவு தற்போது காவல்துறையிடம் உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கும் வழங்கப்பட்டு லேபரட்டரிக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பொன்மாணிக்க வேல் குறிப்பிட்டார். இந்த ஆடியோ ஒரு முக்கிய ஆதாரமாக விளங்கும் என்றும், எந்தவொரு வலுவான வழக்கறிஞராலும் இதனை சீர்குலைக்க முடியாது என அவர் வலியுறுத்தினார். இந்த ஆதாரம் மட்டுமே வழக்கில் தீர்ப்பை தீர்மானிக்கக் கூடும் என்பதே அவரது உறுதி.
ரிதன்யாவுடன் திருமணம் செய்த கவின் குடும்பம், திருமணத்திற்கு 300 சவரன் நகை மற்றும் வோல்வோ கார் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் திருமணத்தின் மூன்றாவது வாரத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் உருவாகத் தொடங்கியதாகவும், இதனைத் தொடர்ந்து ரிதன்யா தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். 20 நாட்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டிற்கு சென்ற ரிதன்யா, ஜூன் 22 அன்று மீண்டும் தாய்வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அடுத்த நாளே கோவிலுக்கு சென்ற ரிதன்யா, காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ஐஜி பாணியில் பேசிய பொன்மாணிக்க வேல், இந்த வழக்கில் எஸ்பி நேரடியாக பங்கு கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதனால் இந்த குடும்பத்திற்கு கூடுதல் ஆதாரம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு தமிழகத்தில் வரதட்சணை தொடர்பான கொடுமைகள் மீதான கவனத்தை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.