தேயிலை உற்பத்தியில் முக்கியப்பங்கு வகிக்கும் நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் முக்கியமான விவசாய மாவட்டமாக விளங்குகிறது. நீலகிரியில் தேயிலை, காபி போன்ற மலைப்பயிர்களும், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், இலைக்கோஸ் உள்ளிட்ட பல மலைக் காய்கறி ரகங்களும் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாகக் கேரட் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பயிராக உள்ளது. கேரட் சாகுபடி செய்வதற்கு முதலில் நிலத்தை உழுது தயார் செய்தவுடன் பேடு கட்டுதல் எனும் அமைப்பில் மண் கட்டப்பட்டு கேரட் விதைப்பதற்காகத் தயார் செய்யப்படுகிறது. அதன் பின்னர் Zubera, Champion, F1 போன்ற ரக விதைகள் விதைக்கப்படுகிறது. கேரட் விதைகள் ஒரு கிலோ சுமார் ரூ.30 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
விதை விதைத்தவுடன் கேரட்டிற்கு அதிக அளவில் நீர் தேவை உள்ளது. எனவே Butterfly என்ற குழாய்கள் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது. மேலும் கேரட் விளைவதற்குத் தேவையான மருந்துகள், எரு உரம் என அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். மேலும், களை எடுத்தல் பராமரிப்பு என அதிக அளவில் கேரட் விவசாயத்தில் வேலைப்பாடு உள்ளது எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இந்த கேரட் விவசாயத்தை நம்பியே பலரது வாழ்வாதாரம் உள்ளது. நீலகிரியில் விளையும் கேரட் உள்ளூரில் மட்டுமின்றி வெளியூர் சந்தைகள் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் தவறாமல் நீலகிரி கேரட்டை வாங்கி ருசிக்கின்றனர்.
கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். கொலஸ்ட்ராலை குறைக்கக் கூடிய நார் சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். நிலத்திலிருந்து எடுக்கப்படும் கேரட் அதை இலைகள் ஒடிக்கப்பட்டு சாக்குப் பைகளில் கொட்டப்படுகிறது. அதன்பின்னர் லாரிகள் மூலமாகச் சுத்திகரிப்பு எந்திரத்திற்கு எடுத்து வந்து கேரட்டில் உள்ள மண் கழுவப்பட்டுச் சுத்திகரிக்கப்படுகிறது.
தற்போது கேரட் உள்ளூர் சந்தைகளில் 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரையிலும், வெளியூர் சந்தைகளில் சுமார் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இதனால் கேரட் நல்ல விலைக்கு வாங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரட் விலை குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “கேரட் விலை அதிகரித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
இதுவரையிலும் கேரட் விலை குறைவாகவே இருந்தது. கேரட் விதை, விதைப்பதற்கு ஆகும் செலவு என ஏக்கருக்கு சுமார் 60 ஆயிரம் வரை செலவாகிறது. மேலும் எரு, மருந்து ஆள் கூலி என்ன அனைத்தையும் கணக்கிட்டால் ஒரு லட்சம் வரை செலவாகின்றது. நல்ல விலைக்கு கேரட் விற்பனையாகும் போது செலவை விட இருமடங்காக லாபம் கிடைக்கிறது. இந்த ஆண்டு விலை அதிகரித்துள்ளதால் விவசாயம் தொடர்ந்து செய்ய அனைவரும் ஆர்வம் காட்டுவோம்” எனத் தெரிவித்தார்.