தமிழகம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் லஞ்சம் கேட்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், உயர் அதிகாரிகள் மற்றும் 24 மணி நேர உழவர் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (டிஎன்சிஎஸ்சி) நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் 2,600-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
தினமும் சுமார் 12,800 விவசாயிகளிடம் இருந்து 60,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான தொகை மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதில், சில மையங்களில் விவசாயிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளதால், டிஎன்சிஎஸ்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2025-ல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, விளாப்பட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, இலுப்பைவிடுதி ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்ததையடுத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, நெல் விவசாயிகள் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. ஏதேனும் புகார்கள் இருந்தால், சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள 24 மணி நேர உழவர் உதவி எண்ணை 1800-599-3540 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளின் குறிப்புக்காக மண்டல மேலாளர், முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் செல்போன் எண்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கும் புகார் அளிக்கலாம். புகார்களை தடுக்க டிஎன்சிஎஸ்சி கூடுதல் பதிவாளர் அந்தஸ்தில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது கட்டுப்பாட்டில் 8 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு குழுவிலும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் கண்காணிப்பு அதிகாரி உள்ளனர். இக்குழுவினரால் பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று விசாரிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட எண்களை வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம். டிஎன்சிஎஸ்சி 9445257000 என்ற நிர்வாக இயக்குநரின் அலைபேசியில் வாட்ஸ்அப் மூலம் மட்டுமே புகார் அளிக்க முடியும். புகாருக்கு ஆதாரமான ஆவணங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்யலாம். புகார்கள் உண்மையாக இருந்தால், தற்காலிக மற்றும் பருவகால ஊழியர்கள் உடனடியாக நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். நிரந்தர ஊழியர்களாக இருந்தால், அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு விதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.